உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய தகவல்கள் வழங்கப்பட்டிருந்தும், அப்போதைய கொழும்பு வடக்கின் பொலிஸ் அத்தியட்சர் சஞ்ஜீவ பண்டார போதுமான உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஷெல்டன் பத்திநாயக்க நேற்று சாட்சியமளித்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ள கரையோர பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உரிய தகவல் உரிய முறையில் பரிமாற்றப்படாமை ஊடாக தான் இதனை உணர்வதாகவும், உரிய முறையில் செயற்பட்டிருந்தால் குறித்த தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் இழப்புக்களை குறைத்திருக்கலாம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப் படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்று செவ்வாய்க்கிழமை 3 ஆவது நாளாக நடை பெற்ற நிலையில் 2 ஆவது சாட்சியாளராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஷெல்டன் பத்திநாயக்க தொடர்ந்து சாட்சியமளித்தார். இதன்போதே அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தின் நெறிப்படுத்தலில் அவரின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் இந்த சாட்சியத் தை பதிவு செய்தார்.
ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலைமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக் ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி அகியோர் முன்னிலையில் நேற்று 2.00 மணி முதல் அவர் இரண்டாவது நாளாக சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.
இதன்போது அவர் சாட்சியமளிக்கையில்,
தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் போதுமான தகவல்கள் உளவு அறிக்கை யில் இருந்தன. அந்த தகவல்கள் உரிய முறையில் உரிய தரப்பினரிடையே பரிமாற்றப்படவில்லை. இது பாரிய குறைபாடாகும். பொலிஸார் உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் அமைத்த பாதுகாப்பு போதுமானதல்ல. குறிப்பாக கொழும்பு வடக்குக்கு அப்போது பொறுப்பாக பொலிஸ் அத்தியட்சர் சஞ்ஜீவ பண்டார இருந்தார்.
அவர் குறித்த உளவுத் தகவல்களை கீழ் நிலை அதிகாரிகளுக்கு வழங்கும் போது உரிய போதுமான நடவடிக்கைகளைக் கையாண்டதாக தெரியவில்லை. விசேடமாக கரையோர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தந்தனாரந்தவுக்கு உளவுத் தகவல்கள் சரியாக பரிமாற்றப்பட்டிருக்கவில்லை. அவரின் பொறுப்பில் உள்ள பகுதியிலேயே தாக்குதலுக்கு உள்ளான கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது.
உரிய முறையில் கொழும்பு வடக்கு பொலிஸ் அத்தியட்சர் செயற்பட்டிருந்தால் இழப்புக்களை குறைத்திருக்கலாம் என்பது எனது நிலைப்பாடாகும். அதேநேரம் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் வரும் கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு பொலிஸ் வலயங்களில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் வினைத்திறனும் போதுமானதாக இல்லை. குறிப்பாக ஏப்ரல் 11 ஆம் திகதி அனைத்து பொலிஸ் வலயங்களுக்கும் அனுப்பப்பட்ட சஹ்ரான் தொடர்பிலான உளவுத் தகவலில் குறிப்பிட்டு, தங்குமிடங்கள் வாடகை வீடுகளை சோதனை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. எனினும் அது உரிய முறையில் செய்யப்பட்டதா என்பதில் சிக்கல் உள்ளது.
பாதுகாப்புத் தரப்பினரிடையே தகவல்களை பரிமாற்றிக் கொள்ள முறையான கட்டமைப்பு இல்லாமை மிகப்பெரும் குறை பாடாகும். அத்துடன் இந்த தாக்குதல் இடம் பெறும் வரை இஸ்லாமிய கடும்போக்குவாதம் தொடர்பில் பொலிஸாருக்கு உரிய அறிவு இருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும் என சாட்சியமளித்தார்.
அதன் பின்னர் விசாரணை முன்னெடுக்கப் பட்ட முறைமை தொடர்பில் அவர் இரகசிய சாட்சியத்தை மாலை 5.45 இன் பின்னர் ஆரம்பித்தார். ஆணைக் குழுவின் அடுத்தகட்ட சாட்சிப்பதிவு நாளை வியா ழக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு இடம் பெறவுள்ளது.
Source- Virakesari