EA Info

2023.09.16- சர்வதேச நிபுணத்துவத்துடன் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை! – கோருகின்றார் கரு

2023.09.16- சர்வதேச நிபுணத்துவத்துடன் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை! – கோருகின்றார் கரு

“உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதலைப் பின்னணியாகக் கொண்டு ‘சனல் 4’ அலைவரிசை ஒளிபரப்பி இருக்கும்  விடயங்கள் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்ளும் பூரண உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கின்றது. அதனால் அது தொடர்பான விசாரணைகளைத் தாமதிக்காமல் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான நிபுணர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.”

– இவ்வாறு சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ‘சனல் 4’ அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டிருந்த விடயங்கள் ஊடாக வெளிப்படுத்தி இருக்கும் விடயங்கள் முறையான விசாரணை  இல்லாமல் ஒருபோதும் ஒதுக்கிவிட முடியுமான விடயங்கள் அல்ல.

அதனால் இதன் மூலம் வெளிப்பட்டிருக்கும்  விடயங்கள் தொடர்பாக சரியான ஆய்வொன்றை மேற்கொண்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் அது இலங்கையின் எதிர்காலத்துக்கு மிகவும் மோசமான அழுத்தங்களை ஏற்படுத்தலாம் என்பது எமது நிலைப்பாமாகும்.

நாடு என்ற ரீதியில் பார்க்கும்போது அது இந்த நாட்டின் இனம் மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பெறுபேற்றை வழங்க முடியும் என்பதுடன்  சர்வதேச ரீதியில் பார்க்கும்போது அவ்வாறானதொரு நிலை நாட்டின் நற்பெயருக்கும் பாதிப்பை  ஏற்படுத்தும்.

உயிர்த் ஞாயிறு தினத் தாக்குதலுக்கு ஏற்புடையதாகக் கவனத்தில்கொள்ளப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழு ஒன்றின் ஊடாகவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ‘சனல் 4’ வெளிப்படுத்தலின் பின்னரும் அது தொடர்பாகத் தேடிப் பார்க்க இரண்டு விசேட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசு தெரிவித்திருக்கின்றது.

இதன்போது நாங்கள் கவனம் செலுத்துவது அவ்வாறு மேற்கொள்ளப்படும் எவ்வாறானதாெரு விசாரணையிலும் குற்ற விசாரணை தொடர்பான நிபுணத்துவமுடைய மற்றும் அது தொடர்பான அனுபவம் உள்ள விசேட குழுவொன்றின் பங்கேற்பு இருக்க வேண்டும்.

அத்துடன் அதன் விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய எந்தத் தராதரங்களில் இருப்பவர்களாக இருந்தாலும்  அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கு முடியுமான நிலைமை அந்த விசாரணைக் குழுவுக்கு இருக்க வேண்டும்.

இதற்கு மேலதிகமாக இதன்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்களாக, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்றதுடன் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பாரிய சமூக கருத்தாடல் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக சில குழுக்கள் மேற்கொண்ட பிரசாரங்கள் தொடர்பாகவும் இதன்போது கவனத்தில்கொள்ள வேண்டும்.

மலட்டு மருந்து, மலட்டுக் கொத்து ராெட்டி மற்றும் மலட்டு சத்திர சிகிச்சை போன்ற வகையில் பல்வேறு பரிமாணங்கள் ஊடாக  வெறுப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தவர்கள் தொடர்பாகவும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமைகள் மூலம் பல்வேறு கொடூரமான செயற்பாடுகளுக்கு நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகச் சாட்சிகள் இருக்கும் சில அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் இதன்போது கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.” – என்றுள்ளது.

Source- Vanakkam London

 

Leave a Reply